₹பல லட்சம் மதிப்பு கிராவல் மண் கடத்தல் |Transportation of Gravel soil|Lorries are captive |Tripur
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காளிநாதம்பாளையம் பொன்நகரில் நீர் ஆதார குட்டை உள்ளது. இங்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியை பயன்படுத்தி கிராவல் மண் கொள்ளை ஜோராக நடக்கிறது. பொக்கலைன் இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளி டிப்பர் லாரிகளில் கடத்துவது தொடர்ந்தது. கொதிப்படைந்த இப்பகுதி விவசாயிகள் மண் அள்ளிய வாகனங்களை சிறைப்பிடித்தனர். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறுகையில், பொன்நகர் குட்டையில் வண்டல் மண் இல்லை. எனினும் இங்கு வண்டல் மண் அள்ள அனுமதி அளித்ததே தவறானது. வண்டல் மண் அள்ள அனுமதி பெற்று கிராவல் மண் எடுத்து வருகின்றனர். நான்கு நாட்களாக இப்பணிகள் நடக்கிறது. ஏற்கனவே எச்சரித்தும் பணிகளை நிறுத்தவில்லை. எனவே வாகனங்களை சிறைபிடித்தோம் என்றார். பல்லடம் தாசில்தார் ஜீவா மற்றும் போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வண்டல் மண் அள்ளுவதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இது போன்று நடக்காது. வாகனங்களை விடுங்கள் என தாசில்தார் கூறினார். சட்ட விரோதமாக கிராவல் மண் அள்ளிய வாகனங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அதுவரை வானங்களை விட மாட்டோம் என விவசாயிகள் திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட தாசில்தார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி பல்லடம் போலீசாருக்கு உத்தரவிட்டார். மண் அள்ள பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மண் கடத்தல் மாமியா கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.