செலவு இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்யும் மேஜிக் பேக்
செலவு இல்லாமல் கழிவுகளை சுத்தம் செய்யும் மேஜிக் பேக் / Trichy / remove plastic waste / professors magic bag சுற்றுச்சூழல் மாசு மற்றும் நீர்நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம் உலகளாவிய பிரச்சினையாகி வருகிறது. மழைக்காலங்களில் நகர்ப்புறங்களில் வரும் வெள்ளம் மற்றும் நீர் மாசு சீரழிவுக்கு கழிவுகள் முக்கிய காரணிகளாகி விட்டன. இதற்கு தீர்வு காணும் வகையில் திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவரான முனைவர் முத்துக்குமரன் முத்தரின் மேஜிக் பேக் கண்டுபிடித்துள்ளார். இந்த புதுமையான பை நீரிலுள்ள கழிவுகளை அகற்ற உதவுவதன் மூலம் குப்பைகள் இல்லாத சர்வதேச சமூகத்தை அடைவதற்கு முன்னெடுத்து செல்கிறது. முத்தரின் மேஜிக் பேக் மிதக்கும் குப்பைகளை சேகரிப்பதற்கான எளிய பயனுள்ள தீர்வாக உள்ளது. பம்புகள் அல்லது மின்சுற்றுகள் சுத்தம் செய்யும் முறைகளைப் போல் இல்லாமல் இந்த மேஜிக் பேக் எந்த வெளிப்புற சக்தி இல்லாமல் செயல்படுகிறது. இந்த பேக் தண்ணீரில் நனைக்கப்படும்போது மிதக்கும் கழிவுகளை எளிதில் உறிஞ்சிவிடும், மேலும் குப்பை உள்ளே நுழைந்தவுடன், அடுத்தடுத்து மூழ்கும்போது அது வெளியேறாமல் உள்வாங்கி கொள்கிறது. மேஜிக் பேக் படகுகளில் இணைக்கப்பட்டிருந்தால், குறைந்தபட்ச மனித சக்தியுடன் பெரிய அளவிலான சுத்தம் செய்யும் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். ஆறு, ஏரி மற்றும் கடலோரப் பகுதிகளில் குப்பைகளை அகற்ற மிகச்சிறந்த தீர்வாக இது அமைந்துள்ளது. மேஜிக் பேக்கிற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பேராசிரியர் முத்துக்குமரன் பெருமிதம் கொண்டார்.