ஸ்ரீரெங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் | Temple Festival | Srirangam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் ஸ்ரீரெங்கநாதருக்கு வெகு விமரிசையாக நடத்தப்படும். சிறப்பு வாய்ந்த ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கருட மண்டபத்தில் இருந்து எடுத்து வந்த தங்கம் மற்றும் வெள்ளிக் குடங்களில் காவிரி ஆற்றில் இருந்து திருமஞ்சனம் எனப்படும் புனிதநீர் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தங்கக்குடமானது கோயில் யானை ஆண்டாள் மீது வைக்கப்பட்டது. வெள்ளிக்குடங்களில் நிரப்பப்பட்ட புனிதநீர் கோயில் அர்ச்சகர்களால் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சாற்றப்பட்டிருக்கும் அங்கிகளைக் களைந்து திருமஞ்சனம் செய்து, பச்சைக் கற்பூரம் சாத்துபடி செய்து மறுபடியும் அங்கிகள் சாத்துபடியானது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். திருமஞ்சன நிகழ்ச்சியையொட்டி நம்பெருமாள் சன்னதியில் இன்றும், நாளையும் மூலஸ்தான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரம் தைலக்காப்பு சாற்றப்பட்டிருப்பதால் இன்று முதல் 48 நாள் மூலவரான நம்பெருமாள் திருவடி சேவை கிடையாது, என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. ஏற்பாடுகளை இணை கமிஷனர் மாரியப்பன் தலைமையில் ஊழியர்கள் செய்தனர்.