கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்| Tiruvannamalai
டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மற்றும் மலை மீது ஏற்றப்படும் தீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவர். நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன் படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி மற்றும் டிஜிபி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருவண்ணாமலையில் இந்த ஆண்டு நடக்கும் தீபத் திருவிழாவில் 35 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே ரேடியா அதிர்வெண் அடையாள பாஸ் வழங்கப்படும். தீபத்திருவிழா பக்தர்கள் காண வசதியாக, 26 இடங்களில் எல்இடி திரை அமைக்கப்படும். 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 88 குற்றத் தடுப்பு குழுக்கள், 87 சதிச் செயல் குழுக்கள் அமைக்கப்படும். கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாட வீதியில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். பொருட்கள் விற்பனை நிலையங்கள், தங்குமிடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். குழந்தைகள் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்தப்படும் என அந்த அறிக்கையை கூறப்பட்டுள்ளது.