காற்று மாசுக்கு எதிராக போராட்டம்: போலீசாரிடம் அத்துமீறிய இளைஞர்கள் மீது வழக்கு 22 arrested for using
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதால், டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. பனிக்காலம் என்பதால், மக்கள் மூச்சு விடுவதில் சற்று சிரமம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டில்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எனக் கூறியும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், இளைஞர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்ற போராட்டம் இண்டியா கேட் பகுதியில் நேற்று நடந்தது. போராட்டக்காரர்கள் சாலையை மறித்து, தரையில் அமர்ந்து அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அவர்களின் கையில், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சல் இயக்கத்தின் கமாண்டர் மாத்வி ஹிட்மாவின் படம், பெயர் அடங்கிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். இந்த போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே போல், பார்லிமென்ட் செல்லும் வழியிலும், மற்றொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு சென்ற போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், போலீசார் மீது மிளகாய், மிளகு பொடி அடங்கிய ஸ்ப்ரே தெளித்தனர். இந்த சில்லி, பெப்பர் ஸ்ப்ரேயால், போலீசாரின் கண்களில் எரிச்சலும், பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பொது இடத்தில் அனுமதியின்றி கூடுதல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.