உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாலியில் 3 இந்தியர்கள் கடத்தல்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் | 3 Indians | Kidnapped | Mali

மாலியில் 3 இந்தியர்கள் கடத்தல்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள் | 3 Indians | Kidnapped | Mali

மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி என்ற சிறிய நாடு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாதித்யா குழுமத்துக்கு (Prasaditya Group) சொந்தமான சிமென்ட் தொழிற்சாலை அங்கு உள்ளது. அந்ததொழிற்சாலையில் இந்தியர்கள் பலர் பணி புரிகின்றனர். கடந்த 1ம் தேதி தொழிற்சாலைக்குள் புகுந்த ஒரு கும்பல் 3 பேரை கடத்தி சென்றது. அல்-கொய்தா பயங்கரவாத அமைப்போடு தொடர்புள்ள ஜமாஅத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வால்-முஸ்லிமின்(JNIM) என்ற பயங்கரவாத குழு, அவர்களை கடத்தியதற்கு பொறுப்பேற்றுள்ளது. 3 இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. கடத்தப்பட்டவர்களில் ஒருவர் வெங்கட்ராமன். ஒடிசாவை சேர்ந்தவர். அவரது உறவினர்கள் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் விவரம் கஞ்சம் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் மாலி தலைநகர் பமகோவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டுள்ளனர். பணம் கொடுத்தால் மூவரையும் விடுவிப்போம் என்று கடத்தல்காரர்கள் கூறியதாக, வெங்கட்ராமனின் குடும்பத்தார் தெரிவித்தனர். கடத்தப்பட்ட இன்னொரு நபர், ஆந்திராவை சேர்ந்த ரமணா. 3வது நபர் தெலங்கானாவை சேர்ந்த அமரேஸ்வரர். அவர்களுடைய குடும்பத்தாரும் தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தரும்படி மாநில மற்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மூவரையும் மீட்டு வர மாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்நாட்டு போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மாலியில் 3 இந்தியர்கள் பயங்கரவாத குழுவால் கடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்களை பாதுகாப்புடன் மீட்க மாலி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை