ஆம்ஆத்மி கொள்கைகளை விட்டு விட்டதாக கடும் தாக்கு Kailash Khelot | Former Delhi Minister | Joins BJP
டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது. டில்லி நஜாஃப்கர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கைலாஷ் கெலாட் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட கைலாஷ் கெலாட் நேற்று அமைச்சர் பதவியில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். விலகல் காரணத்தை கடிதமாக எழுதி கெஜ்ரிவாலுக்கு அனுப்பினார். அதில், டில்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. அது எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து சண்டையிடுவது மட்டுமே டில்லி அரசின் நோக்கமாக இருக்க கூடாது. அதனால் டில்லிக்கு உண்மையான முன்னேற்றம் வராது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நமது அர்ப்பணிப்பு உணர்வை அரசியல் ஆசைகள் முந்திவிட்டன. ஆம் ஆத்மியைச் சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. சேவை செய்வதற்காக வந்த பழைய ஆம் ஆத்மி தானா இது என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பிவிட்டது. அதனால் ராஜினாமா செய்கிறேன் என கைலாஷ் கெலாட் கடிதத்தில் கூறியிருந்தார். கைலாஷ் கெலாட்டின் ராஜினாமாவை ஏற்பதாக முதல்வர் ஆதிஷி அறிவித்தார். எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட் படி கைலாஷ் கெலாட் பேசுகிறார். இது பாரதிய ஜனதாவின் கேவலமான அரசியல் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறினார். எதிர்பார்த்ததுபோலவே இன்று அவர் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். பாஜவில் சேர்ந்தது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அவர் கூறினார்.