விஜயுடன் பேனரில் விஜயகாந்த்: அலறவிடும் தவெகவினர் | Actor Vijay | TVK | 2nd Conference | MGR | Annadu
மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு நாளை நடக்கிறது. இதற்காக 500 ஏக்கரில் பிரம்மாண்டமாக மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்ட திட்டமிட்டுள்ளனர். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற வாசகம் மாநாட்டின் முதன்மை நோக்கமாக உள்ளது. மதுரை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள பேனர்கள், போஸ்டர்களில் இதே வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மாநாட்டு மேடை உச்சியிலும், திடலின் நுழைவு பகுதியிலும் முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை, எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விக்கிரவாண்டியில் நடந்த முதல் நாநில மாநாடு மேடையில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகிய 5 பேருக்கும் நடுவில் விஜய் இடம் பெற்றிருந்தார். அவர்களைத்தான் கொள்கை தலைவர்களாக அறிவித்து அதை கடைபிடித்து வருகிறார் கட்சி தலைவர் விஜய். ஆனால் இந்த முறை அந்த கொள்கை தலைவர்கள் 5 பேரும் அதே மேடை உச்சியில் சிறிய கட்டங்களுக்குள் சுருங்கி விட, பெரிய அளவில் அண்ணாதுரை, எம்ஜிஆர் படங்களுக்கு நடுவே விஜய் இடம்பெற்றுள்ளார். அதன் கீழே வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக, அதிமுக நிறுவனர்களை விஜய் தவெகவின் அடையாளமாக மாற்றி இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக அண்ணாதுரையின் பேச்சுகளை தொண்டர்கள் மத்தியில் பேசி வந்த விஜய், இப்போது நேரடியாக எம்ஜிஆரின் படத்தையும் பயன்படுத்தி இருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது போதாதென்று மதுரையில் தவெகவினர் வைத்துள்ள பல்வேறு பேனர்களில் விஜயகாந்தின் படத்தையும் பயன்படுத்தி இருக்கின்றனர். விஜயகாந்த் படத்தை அரசியல் ரீதியாக யாரும் பயன்படுத்தக்கூடாது என அவரது மனைவியும் தேமுதிக பொதுசெயலாளருமான பிரேமலதா அண்மையில் அறிவித்திருந்தார். அப்படி இருந்தும் ஏஐ மூலம் விஜயகாந்துடன் விஜய் இருப்பது போன்ற போட்டோ போட்டு பேனர் வைத்துள்ளனர். அதில் வைரத்தை இழந்துவிட்டோம் தங்கத்தை இழந்துவிட மாட்டோம் என்றும் வசனத்தையும் எழுதி இருப்பது பேசுபொருளாகி உள்ளது. இந்நிலையில் அண்ணாதுரை, எம்ஜிஆர் இருவரின் படங்களையும் மேடையின் உச்சியில் வைத்தது ஏன் என்று தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். இருவருமே பொதுவாக மக்களின் நம்பிக்கையை பெற்ற தலைவர்கள். அதனால் அவர்களின் படங்களை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார்.