கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்பதால் அதிமுகவுக்கு நெருக்கடி | ADMK | BJP|PMK |Seat Sharing
சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்ற நிலையில் திமுக கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளன. காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீட்டு பேச்சு துவங்கவில்லை. திமுக கூட்டணியில், காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி 40 தொகுதிகள் வேண்டும் என அதிமுகவிடம் பாஜ வற்புறுத்தி வருகிறது. திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றதால், அதிமுக கூட்டணியில் இணைய முக்கிய கட்சிகள் எதுவும் இனி இல்லை. இதை காரணம் காட்டி, அதிமுக கூட்டணியில் உள்ள அமமுக- பாமக - தமாகா, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அதிக தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 7ம் தேதி, அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தபோது 17 தொகுதிகள் என பேசி முடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது 20 தொகுதிகள் வரை கேட்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: கூட்டணி கட்சிகளுக்கு ஒன்றிரண்டு தொகுதிகளை அதிகமாக கொடுப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அதிமுக பலமாக உள்ள தொகுதிகளை கேட்பதுதான் பிரச்னை. தென் மாவட்டங்கள், கொங்கு மண்டலம், சென்னையில் அதிக தொகுதிகளை பாஜ கேட்கிறது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலுார், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பாமக அதிக தொகுதிகளை கேட்கிறது.