திமுகவினர் எதிர்ப்பால் 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது | ADMK MLAs arrest | Collector meeting |
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் கலெக்டர் சதீஷ் தலைமையில் விவசாயிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. சுற்றுலா அமைச்சர் ராஜேந்திரன் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். கூட்டத்தில் அதிமுகவை சேர்ந்த அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோரும் கருத்துகளை பதிவு செய்தனர். எம்எல்ஏ கோவிந்தசாமி பேசும்போது, பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2006ம் ஆண்டு இணை மின் நிலையம் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. 2018ல் அந்த திட்டம் கைவிடப்பட்ட நிலையில், இப்போது 40 சதவீத பணிகள் நடப்பதாக அமைச்சர் பொய்யான தகவல் கொடுப்பதாக கூறினார். அப்போது அங்கிருந்த திமுகவினர் எம்எல்ஏ பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2 அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியே போக சொல்லி வாக்குவாதம் செய்தனர். சிலர் டேபிள் மீது ஏறி அவர்களை விரட்ட முயன்றதால் கூட்டத்தில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் 2 அதிமுக எம்எல்ஏக்களையும் கூட்டத்தில் இருந்து வெளியேற்றிய போலீசார், அவர்களை கைது செய்து அழைத்து சென்றதால் பரபரப்பு நிலவியது.