உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமித்ஷாவிடம் பழனிசாமி பேசியது இதுதான்-பரபரப்பு தகவல் palanisamy amit shah meeting | eps delhi visit

அமித்ஷாவிடம் பழனிசாமி பேசியது இதுதான்-பரபரப்பு தகவல் palanisamy amit shah meeting | eps delhi visit

அதிமுக, பாஜ இடையே கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதியானது. அதிமுகவுடன் கூட்டணி உருவான பிறகு பாஜ தங்களை கண்டுகொள்ளவில்லை என்று கருதிய ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரனின் அமமுக கட்சி பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிமுகவுக்குள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென போர்க்கொடி பிடித்தார். கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; 10 நாள் தான் கெடு; இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பழனிசாமி, கட்சி சட்டதிட்டங்களை மீறி நடந்ததாக கூறி செங்கோட்டையன் வசம் இருந்த அனைத்து பதவிகளையும் பறித்தார். இப்படி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அதிமுகவிலும், அதிமுக, பாஜ கூட்டணியிலும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் தான் ஹரித்துவார் செல்வதாக கூறி விட்டு புறப்பட்ட செங்கோட்டையன், டில்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா, நிர்மலாவை சந்தித்து பேசினார். அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பது தொடர்பாக பாஜ தலைவர்களுடன் பேசியதாக பேட்டி அளித்தார். செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரசாரத்தில் பேசும் போது, ‛அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை எந்த காரணத்தை கொண்டும் சேர்க்கமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்தார். ஒபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலாவுக்கு மட்டும் இன்றி பாஜவுக்கும் இந்த மெசேஜ் போக வேண்டும் என்பதற்காக தான் பழனிசாமி இப்படி பேசினார் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். இவ்வளவு பரபரப்புக்கு நடுவே பழனிசாமி டில்லி பறந்தார். துணை ஜனாதிபதியாக தேர்வான சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து சொன்னார். அதன் பிறகு பழனிசாமி கார் டில்லியில் உள்ள அமித்ஷா வீட்டுக்கு போனது. அவருடன் தம்பிதுரை, வேலுமணி, சிவி சண்முகம், கேபி முனுசாமி ஆகியோரும் சென்றனர். இவர்கள் அனைவரும் அமித்ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தமிழகம் தொடர்பான கோரிக்கை மனு ஒன்றை அமித்ஷாவிடம் பழனிசாமி வழங்கினார். அதே போல் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கே வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்தினார். அதன் பிறகு மற்றவர்கள் அமித்ஷா வீட்டில் இருந்து கிளம்பி விட்டனர். அமித்ஷாவும், பழனிசாமியும் மட்டும் தனியாக சந்தித்து பேசினர். கிட்டத்தட்ட 20 நிமிடம் சந்திப்பு நடந்தது. செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா விவகாரம் தொடர்பாக பழனிசாமி பேசி இருக்கிறார். கட்சியில் இருந்து நீக்கியவர்களை எந்த காரணம் கொண்டும் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்றும், தொண்டர்கள் எடுக்கும் முடிவை மீறி செயல்பட முடியாது; அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் திட்டவட்டமாக பழனிசாமி கூறி உள்ளார். செங்கோட்டையனிடம் பேசியது தொடர்பாக தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார். கட்சி, கூட்டணி தொடர்பாக என்ன விஷயம் என்றாலும், பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னை அழைத்து பேச வேண்டும் என்றும் அமித்ஷாவிடம் கேட்டுக்கொண்டார். கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் 2 பேரும் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுக, பாஜ கூட்டாக பிரசாரம் செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்; எனவே கூட்டாக பிரசார திட்டங்களை வகுக்கலாம் என்று பழனிசாமி தனது விருப்பத்தை கூறி இருக்கிறார். பழனிசாமி சொன்னதை எல்லாம் அமித்ஷா பொறுமையாக கேட்டுக்கொண்டதாக டில்லி வட்டாரம் கூறியது. சென்னை குரூப் ஐபேப்பர்

செப் 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 17, 2025 21:46

கட்சியில் இருந்து நீக்கியவர்களை எந்த காரணம் கொண்டும் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ