ோடிக்கணக்கான இன்சூரன்ஸ் பணம் யாருக்கு போகும்? | Air India Crash | Insurance | Term Insurance
குஜராத்தின் ஆமதாபாதில், ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ல் விபத்துக்குள்ளானதுமே இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், வெளிநாட்டு மருத்துவக் காப்பீடு, தனிநபர் விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க இறந்தவர்களின் விபரங்களைச் சரிபார்க்கும்படி கேட்டுக் கொண்டது. விமான விபத்தில் இறந்தவர்களுக்கான காப்பீடை வழங்குவதில் எந்த நடைமுறை சிக்கலோ, தாமதமோ இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியது. அதன்படி, எல்.ஐ.சி., நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், எச்.டி.எப்.சி லைப், இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ், பஜாஜ் அலையன்ஸ் ஜி.ஐ.சி., மற்றும் டாடா ஏ.ஐ.ஜி., இன்சூரன்ஸ் போன்ற முக்கிய காப்பீட்டு நிறுவனங்கள், ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் உதவி மையங்களை அமைத்துள்ளன. பொதுவாக காப்பீடு செய்தவர் இறந்தால், அவர் நாமினியாக பரிந்துரைத்தவரிடம் இழப்பீடு தொகை ஒப்படைக்கப்படுவது வழக்கம். ஆனால், ஆமதாபாத் விபத்தில், கணவர் இறந்த நிலையில், நாமினியான மனைவியும் இறந்துவிட்டதால், பணத்தை யாரிடம் ஒப்படைப்பது என்ற குழப்பத்தில் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. காப்பீடு செய்தவரும், நாமினியும் இறந்ததால் வாரிசு போன்ற ரத்த சொந்தங்களை தேடி பணம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருப்பின், கூட்டாக அனுமதி பத்திரம் பெற்று, ஒருவரிடம் காப்பீடு தொகை வழங்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் அந்த துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால், காப்பீடு தொகைக்கான ஆவணங்களை பெரும்பாலானவர்கள் சமர்ப்பிக்கவில்லை என இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.