டில்லியில் காற்றின் தரம் படுமோசம்: அபாய கட்டத்தை எட்டியதால் மக்கள் தவிப்பு |Delhi|Air Pollution
டில்லியில் குளிர் காலம் துவங்கியுள்ளது. அண்டை மாநிலமான பஞ்சாப்பில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் உண்டாகும் புகை காற்றில் கலந்து, டில்லியில் பனி மூட்டத்துடன், புகை மூட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால், காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், அதை தடுக்க பஞ்சாப் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டில்லி முதல்வர் வலியுறுத்தினார். இதையடுத்து, விசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என, பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் அறிவுறுத்தலை மீறி பயிர் கழிவுகளை எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. எனினும், இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் விவசாயிகள் ஆங்காங்கே பயிர் கழிவுகளை எரிப்பது தொடர்வதால் டில்லியில் காற்றின் தரம் அபாயகட்டத்தை எட்டியுள்ளது. பஞ்சாப்பின் மோகாவில் இரவோடு இரவாக பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதை அறிந்த போலீசார், சமூக ஆர்வலர்கள் உதவியுடன் அவற்றை அணைத்தனர். பொதுவாக, காற்றின் தரக்குறியீடு 0 - 50 வரை இருந்தால் மிகச் சிறப்பு, 50 - 100 பரவாயில்லை, 100 - 200 லேசான பாதிப்பு, 200 - 300 மோசம், 300 - 400 மிக மோசம், 400க்கு மேல் அபாயம் என்ற வகையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தர நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில், டில்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காற்றின் தரக் குறியீடு 400ஐ கடந்ததால், காற்று மாசு மிக மிக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனந்த் விகார், பவானா, சாந்தினி சவுக், ஆர்.கே.புரம், சோனியா விகார் உள்ளிட்ட பகுதிகளில், காற்றின் தரக் குறியீடு 400 - 440 வரை பதிவானது. இதனால் பல இடங்களில் புகை மூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.