மீண்டும் 19 நாள் மெடிக்கல் லீவு: நிகிதா மீது குவியும் புதுப்புது புகார்கள் ajith kumar lock up
நகை திருட்டு தொடர்பாக கோயில் ஊழியர் அஜித்குமாரை போலீசார் கொடூரமாக தாக்கி விசாரித்தபோது, அவர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது. இது தொடர்பாக பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎஸ்பி சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அஜித்குமார் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது ஏற்பட்ட கோபத்தை போலவே, புகார் கொடுத்த நிகிதா மீதும் மக்களின் கோபம் திரும்பியுள்ளது. திண்டுக்கல்லில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் நிகிதா பேராசிரியையாக வேலை பார்க்கிறார். தாவரவியல் துறை தலைவரும் அவர்தான். இவரது தந்தை ஜெயபெருமாள் துணை கலெக்வராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிகிதா தனக்கு தெரிந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நகை திருட்டுபோன விஷயத்தை சொன்னதால்தான் விசாரணையை தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தி அஜித்குமாரை அடித்து துன்புறுத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியான நிலையில் நிகிதாவை பற்றிய பல விஷயங்களும் வெளிவரத் துவங்கியுள்ளன. நிகிதா மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. 2010ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, துணை முதல்வரின் உதவியாளரை தங்களுக்கு தெரியும் என கூறி, அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி திருமங்கலத்தைச் சேர்ந்த சிலரிடம் ரூ.16 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, திருமங்கலம் போலீசார், நிகிதா, அவர் தாய், தந்தை மீது வழக்கு பதிந்து விசாரித்துள்ளனர். இதேபோல செக்கானூரணியை சேர்ந்து ஒருவருக்கு அரசு கல்லூரியில் பேராசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக வந்த புகாரிலும் நிகிதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகிதாவைப் பற்றி தனக்கு 20 ஆண்டுக்கு முன்பே தெரியும் என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் கூறினார்.