டில்லி முதல்வரானார் ஆதிஷி: 5 அமைச்சர்களும் பதவியேற்பு | Atishi | Sworn in as CM | Delhi
டில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச்சில் கைதானார். 6 மாதங்களாக சிறையில் இருந்தவருக்கு நீண்ட இழுபறிக்கு பின் கடந்த 13ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் கொடுத்தது. சிறையில் இருந்து வெளியே வந்தாலும் முதல்வராக எந்த பணியையும் செய்ய முடியாதபடி ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்திருக்கிறது சுப்ரீம் கோர்ட். இதை உணர்ந்த கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். புதிய முதல்வராக தனது அமைச்சரவையில் இருந்த ஆதிஷியை கைகாட்டினார். இருவரும் 17ம் தேதி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்தனர். கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஆதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடித்ததையும் கவர்னரிடம் கொடுத்தார். இரண்டு கடிதத்தையும் கவர்னர், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, ஆதிஷியுடன் 5 அமைச்சர்களுக்கான நியமனத்திற்கும் அனுமதி அளித்தார். புதிய முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி 21ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி டில்லி ராஜ்நிவாசில் இன்று நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வராக ஆதிஷி, கெஜ்ரிவால் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் வி.கே.சக்சேனா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.