நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தார் ஷேக் ஹசீனா: வங்கதேச அரசியலில் பரபரப்பு
#SheikhHasina #BangladeshPolitics #BangladeshExPM #HasinaReturnstoBangladesh #HasinaSurrender வங்கதேசத்தில் 2024ம் ஆண்டு மத்தியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்தது. இளைஞர்களின் போராட்டம் மிகப் பெரிய கலவரமாக வெடித்தது. பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அலை வீசியதால், அந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஷேக் ஹசீனா பதவியை துறந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். போராட்டக்காரர்கள் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றனர். இதைத் தொடர்ந்து முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த அந்நாட்டு கோர்ட், ஹசீனாவுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பங்களாதேஷ் மக்கள் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, தாரிஹ் ரஹ்மான் பிரதமரானார். புதிய அரசு அமைந்த பின், வங்கதேசத்தில் வன்முறைகள் படிப்படியாக குறைந்தன. இந்த நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வரும் டிசம்பரில் நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் வரும் டிசம்பரில் வங்கதேசத்திற்கு திரும்ப திட்டமிட்டுள்ளேன். அங்கு நான் கைது செய்யப்படலாம். என்னை கொலை செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனினும், என் தாய் நாட்டில் தான் என் உயிர் பிரிய வேண்டும். என் மூதாதையர்களின் உடல் புதைக்கப்பட்ட மண்ணில் தான் என் உடலும் புதைக்கப்பட வேண்டும். என் தாய் தந்தையரின் குருதி கலந்த மண்ணில் தான் நானும் அடக்கம் ஆக வேண்டும் என அவர் கூறியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா தற்போது தன் சொந்த நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது, வங்கதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.