தேவையில்லாமல் இந்தியாவை வம்பிழுத்து வாங்கி கட்டிய யூனுஸ்
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்து ராணுவ உதவியுடன் இடைக்கால நிர்வாகம் நடந்து வருகிறது. இதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். சீனாவின் கடன் உதவியால், வங்கதேசத்தில் பல திட்டங்கள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் உள்ளது. சமீபத்தில் சீனா சென்ற யூனுஸ், அதிபர் ஜிங்பிங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வங்கதேச எல்லையால் சூழப்பட்டு உள்ளது. வங்க கடலை இந்திய மாநிலங்களால் அணுக முடியாது. வங்க கடலின் பாதுகாவலனாக இருக்கும் வங்கதேசத்தில் சீனா அதிகளவு முதலீடு செய்ய வேண்டும் என யூனுஸ் கோரிக்கை வைத்திருக்கிறார். வங்கதேசம் மட்டுமின்றி, அதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களையும் சீனா தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம் என்பதுபோல் இருந்தது யூனுஸின் பேச்சு. இதற்கு, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யூனுஸின் இந்த பேச்சு, வடகிழக்கு மாநிலங்கள் வங்க கடலை அணுகுவதற்கு மாற்று வழியை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி இருப்பதாக, திரிபுராவை சேர்ந்த திப்ரா மோத்தா கட்சி தலைவரும், திரிபுராவை ஆண்ட மன்னர் குடும்பத்தை சேர்ந்தவருமான பிரத்யுத் தேப் பர்மன் கூறியிருக்கிறார். மாற்றுப்பாதைக்காக புதுமையான திட்டத்துக்கு கோடிக்கணக்கில் செலவழிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக வங்கதேசத்தை உடைத்து நமக்கான பாதையை உருவாக்குவோம் என பிரத்யுத் தேப் கூறியிருக்கிறார். வங்கதேசத்தின் சிட்டாங்கில் வசிக்கும் பழங்குடியின மக்கள், இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே நம் நாட்டுடன் இணைய தயாராக இருந்தார்.