அடகு நகையில் நடந்த மெகா மோசடி அம்பலம் bank fraudulent | jewels fraud
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதா ஜெயக்குமார். கேரளாவின் கோழிக்கோடில் உள்ள பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி கிளையில் மேனேஜராக இருந்தார். 3 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வந்த நிலையில், கடந்த ஜூலையில் எர்ணாகுளம் பாலரிவட்டம் கிளைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். கோழிக்கோடு வங்கி கிளைக்கு புதிதாக வந்த மேனேஜர் இர்ஷாத், வங்கியில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை மறு மதிப்பீடு செய்தார். அதில் 26.5 கிலோ நகைகள் போலியானவை என்பது தெரிந்தது. அவற்றின் மதிப்பு 17 கோடி ரூபாய். இது தொடர்பாக, பழைய மேனேஜர் ஜெயக்குமாரிடம் கோழிக்கோடு போலீசார் விசாரிக்க முயன்றனர். டிரான்ஸ்பரில் சென்ற அவர் பணியில் சேராமல் தலைமறைவாகி இருந்தார். தெலுங்கானாவில் பதுங்கி இருந்த ஜெயக்குமாரை கைது செய்தனர். வங்கியின் அடமான நகைகளை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதில் கிட்டத்தட்ட 4 கிலோ நகைகளை, திருப்பூரை சேர்ந்த நண்பர் கார்த்தியிடம் கொடுத்துள்ளார். திருப்பூர் புஷ்பா சந்திப்பில் உள்ள DBS வங்கியில் மேனேஜராக இருக்கும் கார்த்தி, அந்த நகைகளை 17 நபர்களின் பெயரில் பிரித்து வங்கியில் அடக்கு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரிந்தது. அந்த நகைகளை கேரளா போலீசார் பறிமுதல் செய்தனர். கார்த்தியை பிடித்து விசாரிக்கின்றனர். இதே போல், காங்கேயம் சாலையில் உள்ள DBS வங்கி கிளையிலும் 7 கிலோ நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கும் போலீசார் சோதனை நடந்தது.