US விமானம் இறங்க எதிர்ப்பு: பகவந்துக்கு பாஜ கண்டனம் Bhagwant Mann| Deportation Flights|Punjab| India
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்புவதில் தீவிரம் காட்டி வருகிறார் அதிபர் டிரம்ப். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களில் இந்தியர்கள் 18 ஆயிரம் பேர் உள்ளனர். இது தவிர இன்னும் கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் சட்டவிரோதமாக தங்கியிருக்கலாம் என்கிறது அமெரிக்கா. முதற்கட்டமாக கடந்த 5ம் தேதி 104 இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் பஞ்சாபின் அமிர்தசரஸ் ஏர்போர்ட்டில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டனர். இச்சூழலில், மேலும் 119 இந்தியர்களை அமெரிக்க நாடு கடத்த உள்ளது. அவர்கள் இன்று அல்லது நாளை அமிர்தசரஸ் அழைத்து வரப்படுவார்கள். அதில் 67 பேர் பஞ்சாபை சேர்ந்தவர்கள், ஹரியானா 33, குஜராத் 8 உத்தரபிரதேசம்3, கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானை சேர்ந்தர்கள் தலா 2 பேர், ஹிமாச்சல் காஷ்மீரை சேர்ந்த தலா ஒருவர் அழைத்து வரப்பட உள்ளனர். சட்டவிரோத குடியேறிகளை அமிர்தசரஸ் ஏர்போர்ட்டுக்கு அழைத்து வருவதற்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்திய அரசை கண்டித்த அவர், அமிர்தசரசை தேர்வு செய்ததன் மூலம் மத்திய அரசு பஞ்சாபை வேண்டுமென்றே அவமதிக்க முயற்சிக்கிறது என்கிறார். கடந்த முறை இந்தியர்கள் அழைத்து வரப்பட்டபோது, அவர்களின் கை, கால்களில் விலங்குகள் பூட்டப்பட்டு இருந்தது. பயணிகள் விமானத்திற்கு பதிலாக குற்றவாளிகளை போல் ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இது, இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பார்லிமென்டில் போராட்டங்கள் நடத்தின.