ஜெய்சங்கரிடம் அமெரிக்கா சொன்னது என்ன? பரபரப்பு | தகவல் jaishankar marco rubio meet | india us issue
பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததால், அந்த நாட்டுடனான இந்திய உறவு பாதிக்கப்பட்டது. வர்த்தக காரணம் மற்றும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அவர் நமக்கு அடாவடியாக போட்ட 50 சதவீத வரி அமெரிக்க உறவை மேலும் பாதித்தது. ஒரு மாத பதற்றத்துக்கு பிறகு கடந்த வாரம் அமெரிக்க, இந்திய அதிகாரிகள் மீண்டும் வர்த்தக பேச்சை துவங்கினர். உறவின் முன்னேற்றம் ஏற்பட்டதாக நினைத்த நேரத்தில், இந்தியர்களை பாதிக்கும் விதமாக எச்1பி விசா கட்டணத்தை 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி டிரம்ப் அதிர்ச்சி அளித்தார். இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் ஐநா பொதுசபை கூட்டத்துக்காக சென்றார். இதன் ஒரு பகுதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். வர்த்தக மோதலுக்கு பிறகு இருவரும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை. வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக முக்கிய பேச்சு வார்த்தையை நடத்தினர். இந்திய உறவை மார்கோ ரூபியோ வெகுவாக புகழ்ந்து தள்ளினார். அமெரிக்காவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறவு இந்தியா தான் என்று அவர் கூறினார். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா காட்டி வரும் ஈடுபாட்டையும் பாராட்டினார். குவாட் அமைப்பு மூலம் சுதந்திரமான இந்தோ பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க இந்தியாவுடன் அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று ரூபியோ கூறியதாக நம் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. ரூபியோவை சந்தித்த ஜெய்சங்கர், ‛அமெரிக்கா-இந்தியா உறவு மற்றும் கவலை தரும் சர்வதேச விவகாரங்கள் குறித்த முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றார். இந்த சந்திப்பு குறித்து மார்கோ ரூபியோவும் அறிக்கை வெளியிட்டார். ‛அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வளர்ச்சியை தரும் வகையில், வர்த்தகம், எரிசக்தி, மருந்து, அரிய வகை கனிமங்கள் தொடர்பாக முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றார். வர்த்தக மோதலுக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா மீண்டும் வர்த்தக பேச்சை துவங்கி இருக்கும் நிலையில், ஜெய்சங்கர்-மார்கோ ரூபியோ சந்திப்பு இரு நாட்டு உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.