மது குடித்தவர்களை தட்டிக்கேட்ட பாஜ நிர்வாகிக்கு நேர்ந்த சோகம் BJP funtionary attacked by mob minjur
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வல்லூரை சேர்ந்தவர் சிவ கோகுலகிருஷ்ணன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ செய்தி தொடர்பாளராக உள்ளார். மீஞ்சூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் பிரச்னைகள் தொடர்பாக பாஜ சார்பில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். மக்கள் பிரச்னைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலை பிடிக்க நேற்றிரவு அத்திப்பட்டு ரயில் நிலையம் சென்றார். ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதியில் ஐந்தாறு பேர் மது அருந்துவதை பார்த்தார். ஏன் இங்கு மது அருந்துகிறீர்கள்.. போலீசிடம் சொல்லட்டுமா? என தட்டிக் கேட்டுள்ளார். உடனே அந்த வாலிபர்கள் எங்ககிட்டயே அரசியல் பண்றியா? என கேட்டு, சிவ கோகுலகிருஷ்ணன் முகத்தில் சரமாரி குத்தியுள்ளனர். அவர் கீழே விழுந்ததும் ஆசாமிகள் தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக சிவ கோகுலகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜ தலைவர் சுந்தரம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீஞ்சூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தாக்குதலின் பின்னணியில் அரசியல் காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தினார். விரைவில் குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் பாஜ சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என .சுந்தரம் எச்சரித்தார்.