பாக் குணம் அறிந்து இந்தியா வகுத்த வியூகம் | bunkers | Kashmir | Poonch | Jammu
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் எல்லையோர மக்களிடையே பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் தாக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் எல்லையில் வசிக்கும் கிராம மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பதுங்கு குழிகளை சுத்தம் செய்ய தொடங்கி உள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய அரசு மூலமாக பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்ததில் இருந்து போர் நிறுத்த மீறல் சம்பவங்கள் குறைந்திருந்தது. இப்போது மீண்டும் தாக்குதல் தொடங்கி இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என தெரியாத நிலையில் காஷ்மீர் மக்கள் உள்ளனர். எல்லைக்கு அப்பால் இருந்து தாக்குதல் நடக்கும் என்கிற பீதி நிலவுகிறது. அப்படி தாக்குதல் நடந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக நிலத்தடி பதுங்கு குழிகளை தயார் செய்ய முடிவு செய்துள்ளதாக எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு ஒரு திட்டம் கொண்டு வந்தது. ஜம்மு, கதுவா மற்றும் சம்பா, சர்வதேச எல்லை மற்றும் பூஞ்ச், ரஜோரி எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் அமைந்துள்ள கிராமங்கள் உட்பட 5 மாவட்டங்களில் 14,460 பதுங்கு குழிகளை கட்ட அனுமதி வழங்கியது. பின்னர் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக மேலும் 4000க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளை அமைக்கவும் அனுமதி கொடுத்தது. பயன்பாட்டில் இல்லாத அவைகளை மீண்டும் சுத்தம் செய்து தங்குவதற்கு ஏற்ப எல்லையோர மக்கள் மாற்றி வருகின்றனர். இங்குள்ள பதுங்கு குழிகள் பொதுவாக 2.5 மீட்டர் ஆழமும் 3.5 மீட்டர் அகலமும் நீளமும் கொண்டவை. குண்டு வீச்சு தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் கொண்டவையாகும்.