குற்ற செயலில் மோடிக்கு தொடர்பா?: கனடா விளக்கம் canada| hardeep singh nijjar| PM Modi
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்தாண்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, எந்த ஆதாரமும் இல்லாமல் கனடா அரசு குற்றம் சாட்டியதால், இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், நிஜ்ஜாரை கொல்வதற்கான சதி திட்டம் பற்றி இந்திய பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தெரியும் என்று கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த பொய்யான தகவல்களை, கனடா அரசு அதிகாரிகளே பரப்பி விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்திய அரசு இதை கண்டித்தது. கனடா ஊடக செய்திகள் கேலிக்குரியது; அபத்தமானது; உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இருநாட்டு உறவை, இதுபோன்ற செயல்கள் மேலும் மோசமாக்கும் என்று இந்தியா கூறியிருந்தது. ஆனால், ஊடகத்தில் வெளியான தகவலில் கனடா அரசுக்கு தொடர்பில்லை என்று கனடா பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் அறிக்கையில் கூறியுள்ளார். கனடாவுக்குள் நடந்த குற்றச் செயல்களுடன் பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோரை தொடர்பு படுத்துவது குறித்து கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கு ஆதாரங்கள் இல்லை. ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஊகமானது; தவறானது என்று கூறியுள்ளார்.