உத்தரபிரதேசத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்து | Car accident | Saryu canal | Gonda district
கோயிலுக்கு சென்ற 15 பேருடன் ஓடைக்குள் பாய்ந்த கார்! தண்ணீருக்குள் உயிரை விட்ட 11 பேர் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டம் சிஹாகான் கிராமத்தை சேர்ந்த 15 பேர் கார்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயிலில் புனித நீராட காரில் புறப்பட்டனர். பெல்வா பஹுதா அருகே சென்றபோது திடீரென கார் சாலையோரம் உள்ள சரயு கால்வாயில் கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த கிராமத்தினர், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் இணைந்து கால்வாயில் மூழ்கிய காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர். அதில் 11 பேர் நீருக்குள்ளேயே இறந்ததால் சடலமாக மீட்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த 4 பேர் அருகில் உள்ள ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டனர். வேகமாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இந்த கொடூர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். கோண்டா மாவட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்து மிகவும் வருத்தம் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் ராமரை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி என யோகி ஆதித்யநாத் பதிவிட்டுள்ளார்.