உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கரூரில் சிபிஐ விசாரணையா? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

கரூரில் சிபிஐ விசாரணையா? ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு

கரூரில் நடந்த தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டில் 7 பேர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில் கட்சிகளின் ஊர்வலம், கூட்டம், மாநாடுகளுக்கு வரும் கூட்டத்தை முறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். கரூரில் இறந்தோரின் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய், காயமடைந்தோருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பான இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், ஜி.எஸ்.மணி, கே.கே.ரமேஷ், எம்.எல்.ரவி ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விசாரணையின் போது, சிபிஐ விசாரணை கோரும் மனுதாரர் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரா எனக் கேள்வி எழுப்பினர். கரூர் சம்பவத்தில் போலீஸார் விசாரணை திருப்தியில்லை என்றால் தான் சிபிஐ விசாரணை கோர முடியும். விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும் போதே, சிபிஐ விசாரணை கோர முடியாது. கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கு போது, நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்றனர். கரூர் சம்பவம் விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இழப்பீட்டு தொகை அதிகமாக வழங்கக்கோரியது, கூட்டநெரிசலில் சிக்கி இறந்தவர்களின் பிரேதப்பரிசோதனை தொடர்பான 4 வழக்குகளையும் தள்ளுபடி செய்தனர். பொதுக்கூட்டங்கள் நடைமுறைகள் தொடர்பான 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அப்போது, பொதுக்கூட்டங்களுக்கு வரும் கட்சியினருக்கு வெளியே செல்வதற்கான வழியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக் கூடாது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அனுமதி வழங்க வேண்டும். பொதுக்கூட்டங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கூட்டம் நடத்துவோர் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதை போலீஸார் ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வேண்டும். மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை காக்க வேண்டியது அரசின் கடமை. எனவே அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். இதுபோன்ற வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. அரசியல் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும். அதுவரை இந்த அமர்வின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். #CBI #Karur #dismissed #high-count #KarurStampede #TVKVijay #TVKVijayKarurStampede #KarurNews #BreakingNews #VijayUpdates #TamilNaduNews #SafetyFirst #EventSafety #CrowdControl

அக் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை