சென்னையில் இடி மின்னலுடன் தீவிர மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இருந்து 140 கி.மீ. தூரத்தில் பெஞ்சல் புயல் இருக்கிறது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 12 கி.மீ வேகத்தில் நகர்கிறது. காரைக்கால், -மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், புயல் தன் திசையை மாற்றியது. வடமேற்காக நகர்ந்த பெஞ்சல் புயல், மேற்கு வடமேற்கு திசையில் நகர தொடங்கியது. இதனால், புயல் கரைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். இன்று மாலை கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறியுள்ளது. புயல் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில், இடி மின்னலுடன், மிதமானது முதல் கன மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இது தவிர 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.