உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உருக்கமான பதிவுடன் செதேஷ்வர் புஜாரா ஓய்வு | Cheteshwar Pujara | Retirement | Indian cricket team

உருக்கமான பதிவுடன் செதேஷ்வர் புஜாரா ஓய்வு | Cheteshwar Pujara | Retirement | Indian cricket team

கிரிக்கெட்டில் இருந்து செதேஷ்வர் புஜாரா ஓய்வு ரசிகர்களை நினைத்து உருக்கம் Title: உருக்கமான பதிவுடன் செதேஷ்வர் புஜாரா ஓய்வு Cheteshwar Pujara indian cricket team Gujarat retirement அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா அறிவித்துள்ளார். செதேஷ்வர் புஜாரா குஜராத் மாநிலம், ராஜ்கோட்டை சேர்ந்தவர். 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் அறிமுகமானார். இந்திய அணியில் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடியவர். 15 ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடி, 7195 ரன் எடுத்துள்ளார். இதில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரை சதங்கள் அடக்கம். டெஸ்ட் போட்டியில் புஜாராவின் ரன்ரேட் விகிதம் 43.60. டெஸ்ட் போட்டிகளைப்போல ஒருநாள் போட்டிகளில் புஜாரா ஜொலிக்கவில்லை. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 51 ரன் மட்டுமே எடுத்தார். ஒருநாள் போட்டியில் 27 ரன்தான் அதிகபட்ச ஸ்கோர். அதேபோல, 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 51 ரன். இந்திய கிரிக்கெட் அணிக்காக நீண்ட காலம் ஆடிய வீரர்களில் ஒருவரான புஜாராவின் பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கியமானதாக இருந்தாலும், சமீபகாலமாக தேசிய அணியில் அவரால் இடம் பெற முடியவில்லை. இந்நிலையில், அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. ஓய்வு பெறுவதை அறிவித்து உருக்கமான ஒரு பதிவை அவர் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: ராஜ்கோட் எனும் சிறிய நகரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனாக இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்ற கனவுடன் பெற்றோருடன் புறப்பட்டேன். ஆனால், கிரிக்கெட் எனக்கு இந்தளவுக்கு புகழை தரும் என அப்போது எனக்குத் தெரியவில்லை. விலைமதிப்பற்ற வாய்ப்புகள், அனுபவங்கள், இலக்கு, அன்பு, எல்லாவற்றுக்கும் மேலாக என் மாநிலத்தையும், இந்த மகத்தான தேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஜெர்சியை அணிந்து கொண்டு தேசிய கீதம் பாடியது, ஒவ்வொரு முறையும் என்னால் முடிந்ததைச் செய்யும் முயற்சியுடன் மைதானத்தில் அடியெடுத்து வைத்தது என அந்த சிறப்புமிக்க தருணங்களை வார்த்தைகளால் விவரிப்பது கடினம். ஆனால் எல்லாரும் சொல்வது போல, எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வந்தாக வேண்டும், மிகுந்த நன்றியுணர்வுடன் நான் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் வாய்ப்பு தந்து ஆதரவளித்த இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக என்னுடன் விளையாடிய சகவீரர்கள், நான் விளையாடிய அணிகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். என்னுடைய வழிகாட்டிகள், பயிற்சியாளர்கள் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதல் இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. அவர்களுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். இந்த விளையாட்டு என்னை உலகம் முழுவதும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. நான் விளையாடும் இடங்களில் ரசிகர்கள் அளித்த ஆதரவும் ஊக்கமும் எப்போதும் நிலையானதாக இருந்தது. அதற்காக, எப்போதும் ரசிகர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். இந்த கிரிக்கெட் பயணத்தை உண்மையிலேயே சிறப்பாக மாற்றிய எனது பெற்றோர், என் மனைவி பூஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் நன்றி என உருக்கத்துடன் புஜாரா கூறியுள்ளார்.

ஆக 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை