விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவர் கூட்டமைப்பு எச்சரிக்கை | vaccines | Pediatrics | Child vaccine
குழந்தை பிறந்தவுடன் 1, 2 , 6 மாதம், ஓராண்டு என அரசு தரப்பில் 13 வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் கூட்டமைப்பு 20 வகையான பட்டியலை பரிந்துரைக்கிறது. அரசு தரப்பில் இன்புளூயன்சா ஏ மற்றும் பி, டைபாய்டு, மம்ப்ஸ் உள்ளிட்ட சில தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. இதுகுறித்து இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பின் தமிழக தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: இன்புளூயன்சா ஏ மற்றும் பி, டைபாய்டு, மம்ப்ஸ், ஹெபடைடிஸ் ஏ, சிக்கன் பாக்ஸ், மெனிஞ்கோகாக்கஸ், ஜாப்பனிஷ் என்சப்லட்டீஸ் ஆகிய ஏழு தடுப்பூசிகள் அரசு தடுப்பூசி பட்டியலில் இல்லை. இதனை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதில் அரசுக்கு அதிக செலவினங்கள் ஏற்படும். உடனடியாக அனைத்தையும் சேர்ப்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் இதன் முக்கியத்துவத்தை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு பட்டியலில் உள்ள தடுப்பு மருந்துகளை போட்டு விட்டோம். இது தேவையில்லை என பல பெற்றோர் நினைக்கின்றனர். தடுப்பூசி செலுத்தாமல் பல குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதையும், எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள குழந்தைகள் ஐசியுவில் சிகிச்சை பெறுவதையும் காண முடிகிறது என்றார்.