போலி நகை வைத்து ஏமாற்றி 18 லட்சம் கடன்! | cooperative bank locker | Sivaganga | Scam
சிவகங்கை மாவட்டம் நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் இணை பதிவாளர் தலைமையில் லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்த்தனர். 13 பாக்கெட்களில் இருந்த 50 சவரன் நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகளை அடமானமாக வைத்து 18 லட்சத்து 67 ஆயிரம் கடன் பெற்றுள்ளனர். அடமானமாக வரும் நகைகளை, நகை மதிப்பீட்டாளர் பரிசோதனை செய்து, தொகையை குறிப்பிட்டு செயலரிடம் கொடுத்து விடுவார். லாக்கரை திறக்க கூட்டுறவு சங்க செயலர் மற்றும் கேஷியரிடம் மட்டுமே சாவிகள் இருக்கும். அவர்கள் இருவரும் தான் லாக்கரை திறந்து அடமானமாக வந்த நகைகளை வைக்க வேண்டும். இம்மூன்று பேருக்கும் தெரியாமல் போலி நகை லாக்கருக்கு செல்ல வாய்ப்பே இல்லை என அதிகாரிகள் கூறினர். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் இது தொடர்பாக விசாரித்து வருகிறார். கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் இதுபோன்ற மோசடி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட அளவில் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் உள்ள நகைகளை பரிசோதிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.