காரைக்குடி ரவுடி சம்பவம்: எஸ்பி ஆஷிஷ் பரபரப்பு தகவல் | Rowdy Manoj Hacked | Karaikudi | 3 arrested
அப்பாவுக்காக பழிதீர்த்த மகன் ரவுடி சம்பவத்தில் பகீர் தகவல் ட்ரோன் பறக்க விட்டு 3 பேரை தூக்கிய போலீஸ் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அடுத்துள்ள சேர்வா ஊரணியைச் சேர்ந்தவர் மனோஜ். ரவுடி. கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த மனோஜ், இன்று காலை காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டார். பிறகு, நண்பர்கள் சபீக் மற்றும் கார்த்திக் உடன் டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் பின்தொடர்ந்து வந்த 3 ஆசாமிகள் டூவீலர்களை இடித்து தள்ளினர். பயந்து போய் ஓடிய மனோஜை அரிவாளால் சரமாரி வெட்டிக் கொன்றனர். கார் மோதியதில் விழுந்த நண்பர்களை கொலையாளிகள் எதுவும் செய்யவில்லை. காரைக்குடியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து காரைக்குடி டிஎஸ்பி பார்த்திபன், தேவகோட்டை டிஎஸ்பி கவுதமன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதனிடையே, கொலையாளிகள் சென்ற காரை போலீசார் விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டி வருவதைக் கண்ட கொலையாளிகள் காரை சிறாவயல் காட்டுபகுதியில் நிறுத்தி விட்டு ஓடினர். அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் ஒளிந்து கொண்டனர். கொலையாளிகள் அங்கிருந்து தப்பி விடாதபடிக்கு மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமையிலான போலீசார் ட்ரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதி முழுவதையும் தீவிரமாக தேடினர். கொலையாளிகள் எங்கு பதுங்கியிருக்கிறார்கள் என்பதை ட்ரோன் காட்டிக் கொடுத்தது. காட்டுப் பகுதியில் உள்ள பழமையான ஒரு கோயிலுக்குள் 3 ஆசாமிகள் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். விரைந்து சென்று 3 பேரையும் கோழி அமுக்குவதைப்போல அமுக்கினர். காரைக்குடியையைச் சேர்ந்த குருபாண்டியன் (23), அவனது நண்பர்கள் விக்கி என்ற விக்னேஸ்வரன் (21) ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் வயது 23 என்பது விசாரணையில் தெரிய வந்தது.. கைது செய்தவர்களிடம் விசாரித்தபோது இதில் குருபாண்டியன்தான் மனோஜை கொல்ல திட்டம் தீட்டினான் என தெரிய வந்தது. 2021ல் குருபாண்டியனின் தந்தை லட்சுமணன் கொலை செய்யப்பட்டார். மனோஜின் நண்பன் பிரகாஷுக்கு லட்சுமணன் கடன் கொடுத்துள்ளார். வீட்டில் பிரகாஷ் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு சென்று அவர் மனைவியிடம் லட்சுமணன் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரகாஷ் மனைவியை லட்சுமணன் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அதுபற்றி உறவினர்களிடம் சொல்லி பிரகாஷ் மனைவி அழுதுள்ளார். அதைத் தொடர்ந்தே லட்சுமணன் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரகாஷ் உறவினர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். லட்சுமணன் கொலையில் மனோஜ் அக்கியூஸ்டாக சேர்க்கப்படவில்லை. ஆனாலும் மனோஜ் உதவி செய்யாமல் அப்பா லட்சுமணனை யாராலும் கொலை செய்திருக்க முடியாது என குருபாண்டியன் உறுதியாக நம்பினான். அதனால் மனோஜை கொல்ல திட்டம் தீட்டினான். அதற்குள் கஞ்சா வழக்கில் மனோஜ் சிறைக்கு போனதால் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. 2 வாரத்துக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் மனோஜ் வந்ததும் அவரைக் கொல்ல பிரஷ்ஷாக திட்டம்போட்டார். நண்பர்கள் விக்கி, சக்திவேல் உதவியுடன் மனோஜை கொடூரமாக கொன்றுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. ஆஷிஷ் ராவத் போலீஸ் சூப்பிரண்டு ரவுடி கொலை நடந்த 3 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த போலீசாரை எஸ்பி ஆஷிஷ் ராவத் பாராட்டினார். கைதானதும் குருபாண்டியனும், சக்திவேலும் தப்பி ஓட முயன்றனர். அப்போது பள்ளத்தில் விழுந்து கால் முறிந்தது. இருவரும் சிவகங்கை மருத்தவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர். இருவருக்கும் காலில் கட்டுபோடப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.