ஒரு தனியார் கம்பெனிக்காக பெரிய அராஜகம் நடந்திருக்கு | BJP | Aswathaman | Cuddalore Naduveerapattu
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட வானமாதேவி, கொடுக்கன்பாளையம், தெத்தங்குப்பம், கட்டாராசாவடி உள்ளிட்ட கிராமங்களில் அரசுக்கு சொந்தமாக 162 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடு கட்டியும், முந்திரி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் அமையவிருக்கும் தோல் தொழிற்சாலைக்காக, நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு நிலங்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பரில் அவசர அவசரமாக நோட்டீஸ் வழங்கியது வருவாய்துறை. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஜனவரி 4ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யாவிடம் மனு கொடுத்தனர். இந்த நிலையில் ஜனவரி 30 அன்று கடலூர் ஆர்டிஓ அபிநயா தலைமையில் அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு ஜேசிபி இயந்திரங்களுடன் சென்றனர். அங்கிருந்த பலா மற்றும் முந்திரி மரங்களை ஜேசிபி இயந்திரங்கள் வேரோடு சாய்த்தன. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைமுறை தலைமுறையான மக்கள் அனுபவத்தில் இருந்து வரும் நிலத்தை எப்படி தனியாருக்கு தூக்கி கொடுக்கலாம் என பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பி உள்ளார்.