வெளிநாடு வேலைக்கு செல்பவர்களே உஷார் | cyber slaves | abroad job | cyber crime
சைபர் அடிமைகள் ஆகும் தமிழக இளைஞர்கள்! இந்தியாவில் கல்லூரி படிப்பு முடித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஒரு சில போலி ஏஜன்சிகள், கல்லுாரி படிப்பு முடித்து வெளிவரும் மாணவர்கள், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் உள்ளிட்டவர்களை குறிவைத்து வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்கின்றனர். அவர்களை அணுகும் இளைஞர்களிடம் கால் சென்டர், டேட்டா என்ட்ரி வேலை எனக்கூறி டூரிஸ்ட் விசாவில் கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், வேறு சில நாடுகளுக்கும் அழைத்து செல்கின்றனர். அங்கு சென்றவுடன், பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு, அவர்களை கட்டாயப்படுத்தி, ஆன்லைன் முதலீடு உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40,000 பேர் இப்படி சிக்கியுள்ளதாகவும், தமிழகத்தில் இருந்து மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சிக்கி இருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.