வலுப்பெற்றது தாழ்வு மண்டலம்; முக்கிய அப்டேட் | IMD | Bay of Bengal | Cyclone | Cyclone Dana | Rain
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியது. வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை டானா புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள சாகர் தீவுக்கு இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் எந்த தாக்கமும் இருக்காது என நம்பப்படுகிறது. அதே நேரம் புயலை எதிர்கொள்ளும் வகையில் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் 25 தேசிய பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. சேதத்தை குறைக்கும் வகையிலும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இது தவிர தமிழகம், கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யலாம். நாளை தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.