திருச்சி நிதி நிறுவனத்தில் பலே மோசடி அம்பலம் | Duplicate jewel | Fraud | 3 Arrest | Trichy
திருச்சி, பாலக்கரை பகுதியில் மணப்புரம் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் கிளை உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் வரவு- செலவு கணக்குகளை அதிகாரி ஆகாஷ் தணிக்கை செய்தார். அப்போது, இந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 3 பேர் 132 கிராம் செம்பு கம்பியில் தங்க முலாம் பூசிய போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.5 லட்சத்து 5 ஆயிரத்து 339 கடனாக பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மனோஜ் மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு பேரும் மேலாளராக இருந்தபோது நடந்துள்ளது. மோசடி குறித்து பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் நிதி நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலி நகைகளை அடமானம் வைத்த பாலக்கரையை சேர்ந்த சரவணன் (37), ஈபி ரோட்டை சேர்ந்த ராம்குமார் (33), மல்லிகைபுரத்தை சேர்ந்த டேவிட் ஆரோக்கியராஜ் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.