வியாசர்பாடி டிப்போவில் மின்சார பஸ் பேட்டரி வெடித்தது | Electric Bus | Chennai EV Bus
முதல்வர் துவங்கிய மின்சார பஸ்! ஒரே வாரத்தில் பேட்டரி வெடித்தது 2 ஊழியர்கள் கை கருகியது சென்னையில் 208 கோடி ரூபாய் செலவில் 120 மின்சார பஸ்களை கடந்த 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பிராட்வே - கிளாம்பாக்கம், வள்ளலார் நகர் - செங்குன்றம், பெரம்பூர் - மணலி உட்பட 11 வழித்தடங்களில், 120 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் சார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பு, வியாசர்பாடி டிப்போவில் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம், 32 சார்ஜ் பாயின்ட்டுகள் உள்ளன. மின்சார பஸ் துவங்கிய முதல் நாள் முதல், தினமும் மூன்று பஸ்கள் வரை ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகி நின்றன. இந்த நிலையில் தற்போது பேட்டரி வெடிக்கும் சம்பவம் நடந்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. வியாசர்பாடி டிப்போவில் மின்சார பஸ்களுக்கு சார்ஜ் ஏற்றும் பணியில் கோவையை சேர்ந்த பரத்குணா, மஹாராஷ்டிராவை சேர்ந்த ஷாம் ஈடுபட்டிருந்தனர். மின்சார பேருந்தின் பேட்டரியை கழற்றி, பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக பேட்டரியின் மல்டி மீட்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், பரத்குணா, ஷாம் ஆகியோரின் இடது, வலது கை கருகியது. அருகில் இருந்த ஊழியர்கள் அவர்களை மீட்டு, ஸ்டான்லி ஆஸ்பிடலில் சேர்த்தனர். பின் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். சம்பவம் குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சார பஸ் திட்டம் வரவேற்கக்கூடியது. அதைவிட பயணிகள் பாதுகாப்பு மிக முக்கியம். டிப்போவில் பேட்டரி வெடித்ததுபோல், பஸ் ஓடும்போது நடந்தால் என்ன செய்வது? மழைக்காலத்தில் இந்த பேருந்துகளை எப்படி இயக்குவார்கள் என தெரியவில்லை. பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய நிர்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறனர் ஆர்வலர்கள்.