சர்ச் திருவிழா பணியில் ஈடுபட்ட பக்தர்களுக்கு சேர்ந்த சோகம்
கன்னியாகுமரியில் இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் சர்ச் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நாளை நடைபெற உள்ளது. தேர் செல்லும் பாதையில் தடையாக பொருட்களை அகற்றும் பணியும் அலங்காரம் செய்யும் பணியும் இன்று நடைபெற்றது. இதற்காக, சக்கரங்களுடன் கூடிய 30 அடி உயரமுள்ள இரும்பு ஏணியை ஏற்பாட்டாளர்கள் பயன்படுத்தி உள்ளனர். அந்த ஏணியை வேறொரு இடத்திற்கு நகர்த்தி சென்றபோது, உயரழுத்த மின்சார கம்பியில் உரசி உள்ளது. இரும்பு ஏணி வழியாக கடந்த மின்சாரம், ஏணியை தள்ளி சென்றவர்கள் மீது பாய்ந்தது. இதில், இனையம் புத்தன்துறை கிராமத்தை சேர்ந்த, மீனவர்கள் விஜயன், ஜஸ்டின், சோபன், மனோ ஆகிய 4 பேர் துடிதுடித்தனர். அவர்களது உடல் மீது தீப்பொறி பற்றியது. அங்கு இருந்தவர்களால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. 4 பேரும் உடல் கருகி அங்கேயே இறந்தனர். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சம்பவம் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.