ஏற்காடு பழங்குடியினர் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் | POCSO | School Teacher
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியின மாணவ மாணவிகள் படிக்கும் ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. சேலம் தும்பல் நொய்யமலை பகுதியை சேர்ந்த இளையகண்ணு 2019 முதல் இங்கு தற்காலிகமாக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பல ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை இவர் மீது பழங்குடியினர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இவருக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தின் செல்வாக்கு இருந்ததால் அதிகாரிகள் இவரை கண்டித்து மட்டும் அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 5ம் தேதி சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். மாணவியரிடம் உங்களுக்கு பாலியல் சீண்டல் ஏதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களது பெயர் வெளியில் வராமல் நாங்கள் பாதுகாப்போம் என்று கூறினர். அப்போது 12 மாணவிகள் ஆசிரியர் இளையகண்ணுவின் பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். பள்ளி மாணவி ஒருவர் சேலம் கொண்டலாம்பட்டி மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். விசாரணையில் இளையகண்ணு மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதனையறிந்த அவர் தலைமறைவானார். செல்போன் சிக்னலை வைத்து தேடப்பட்டார். சென்னையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.