புல்லட் ரயில் திட்ட பணியில் புதிய சாதனை: கடலுக்கு அடியில் சிக்கலான இடத்தில் சுரங்கப் பணி வெற்றி
#BulletRailProject| #Mumbai_Ahmedabad_BulletRail| #NewBreakThorugh@BulletRailProject| #AshwiniVaishnav|IndianRailways|#NHSRCL மகாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையே நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டப் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. ஜப்பான் நிதி உதவியுடன் நடக்கும் இந்த திட்டத்தின் கீழ், இரு நகரங்கள் இடையே 508 கிமீ புல்லட் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. தற்போதைய சூழலில், மும்பையில் இருந்து ஆமதாபாத்துக்கு சாலை மார்க்கமாக செல்ல 11 மணி நேரமும், எக்ஸ்பிரஸ் ரயில்களில் 7 - 8 மணி நேரமும் ஆகிறது. புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்க வந்தால், வெறும் 2 மணி நேரத்தில் பயணம் சாத்தியமாகும். இதன் மூலம், மும்பை - ஆமதாபாத் நகரங்கள் மட்டுமின்றி, இரு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்கள், மேற்கு மண்டலம் முழுதும் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி அடையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டதிற்காக, கடலுக்கு அடியில் 21 கிமீ துாரத்திற்கு சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. இதில், ஏற்கனவே, 2.7 கிமீ சுரங்கம் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், மிகவும் சிக்கலான பாறைகளுடன் கூடிய பி.கே.சி. - ஷில்பதா இடைப்பட்ட பகுதியில் சுரங்கம் தோண்டும் பணி இன்று முக்கிய மைல்கல்லை எட்டியது. தானேயில் மிக சிக்கலான பகுதியில் நியூ ஆஸ்ட்ரியன் டனலிங் மெத்தட் முறையில் 4.8 கிமீ சுரங்கப் பணி இன்று நிறைவடைந்ததை ஒட்டி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு செய்தார். மிக சிக்கலான பணியை செய்து முடித்த பொறியாளர்கள், ஊழியர்களை பாராட்டினார். அதிவேக புல்லட் ரயில் திட்ட பாதையில், பாலங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், முக்கிய இடத்தில் சிக்கலான சுரங்கம் அமைக்கும் பணி வெற்றி பெற்றதால், மீதமுள்ள பணிகள் வேகமெடுக்கும் என, அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இதைத் தொடர்ந்து சுரங்கம் அமைக்க வேண்டிய மீதியிடங்களில் டனல் போரிங் அடிப்படையில் பணிகள் வேகமெடுக்கும் என பொறியாளர்கள் கூறினர். மொத்தம் 508 கிமீ துார பாதையில், ஏற்கனவே, 321 கிமீ பாதையில் தேவையான பணிகள் நிறைவடைந்துள்ளன. நதிகளின் குறுக்கே 17 பாலங்கள், 9 பெரிய இரும்பு பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 7 இடங்களில் மலைகளை குடைந்து பாதை அமைக்கும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. கடலுக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியில் மிகப் பெரிய சவாலாக இருந்த இடத்தில் பணி நிறைவடைந்ததால், இனி புல்லட் ரயில் திட்ட பணி எவ்வித தொய்வும் இன்றி வேகமெடுக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்ட பணியில் முக்கிய மைல் கல் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி இந்த பணிகள் வேகமெடுக்கும். நேற்று இங்கு வந்த ஜப்பான் குழு புல்லட் ரயில் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். பணிகள் சிறப்பாக நடப்பதாக கூறினர். ஏற்கனவே 320 கிமீ பாலப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. நதிகளின் மீதான பாலப் பணிகளும் முடிந்துவிட்டன. குஜராத்தின் சபர்மதி டெர்மினல் பணியும் நிறைவடைந்துவிட்டது. மும்பையில் இருந்து 2 மணி நேரம் 7 நிமிடத்தில் ஆமதாபாத்துக்கு சென்றடைய முடியும். இரு மார்க்கங்களிலும் உள்ள முக்கிய நகரங்கள் பொருளாதார வளர்ச்சி அடையும். குறிப்பாக தானே, வாபி, சூரத், வதோதரா ஆகிய நகரங்களின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய அளவில் மேம்படும். ஜப்பானின் டோக்கியோ - ஒசாகா புல்லட் ரயில் திட்டத்தை போல், இந்த திட்டமும் மிகப் பெரிய வெற்றி திட்டமாக அமையும். இதன் மூலம் குறிப்பிட்ட நகரங்கள் மட்டுமின்றி, நாட்டின் மேற்கு மண்டலம் முழுதும் வளர்ச்சி பெறும். ஆரம்பத்தில் பீக் ஹவர் நேரங்களில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயிலும், சில நாட்களுக்கு பின், 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படும். தற்போதைய நடைமுறைப்படி முன்பதிவு செய்து தான் பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேராக ரயில் நிலையத்திற்கு வந்து, டிக்கெட் எடுத்து புல்லட் ரயிலில் உடனுக்குடன் பயணிக்கலாம் என, அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.