இந்து முறைப்படி 60ம் கல்யாணம் செய்து கொண்ட வெளிநாட்டு தம்பதி! | Tamil Culture Marriage
இப்படியொரு 60ம் கல்யாணத்தை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க! பிரான்ஸ் நாட்டின் மாண்ட்பெல்லியர் நகரத்தை சேர்ந்தவர் யுவெஸ் அர்னெய்ல் லே. அவருக்கு 70 வயதாகிறது. ஆப்ரிக்காவிலுள்ள டோகோ நாட்டின் தலைநகரான லோமை சேர்ந்தவர் ஜூலியென் சரெளனா லே. இவருக்கு 60 வயதாகிறது. இருவரும் காதலித்து மணம் செய்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர். மாண்ட்பெல்லியர் நகரத்தில் மானாமதுரை அ.விளாக்குளத்தை சேர்ந்த மார்க் அமலன் வேலை செய்கிறார். யுவெஸ் அர்னெய்ல் லேவும், மார்க் அமலனும் நண்பர்கள் ஆகினர். அமலன் தமிழக கலாசாரத்தை பற்றியும், திருமண முறைகள் பற்றியும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவெஸ் அர்னெய்லிடம் எடுத்து கூறி உள்ளார். அந்த தம்பதிக்கு தமிழக கலாசாரம் மிகவும் பிடித்து போனதால் தங்களது அறுபதாம் கல்யாணத்தை தமிழ் முறைப்படி நடத்த வேண்டுமென விரும்பினர். இதற்கு உதவ வேண்டுமென மார்க் அமலனிடம் கேட்டு கொண்டனர். இதையடுத்து மார்க் அமலன் தனது தந்தை மூலம் கிராமத்தில் அறுபதாம் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார். முதலில் இந்தியா வந்த அந்த வெளிநாட்டு தம்பதிகள் பிரயாக்ராஜில் மகா கும்பமேளத்தை கண்டு வியந்தனர். பின்னர் தமிழகம் வந்து மானாமதுரையில் மார்க் அமலனின் தோட்டத்துக்கு சென்றனர். அங்கு திருமண ஏற்பாடுகள் தயாராக இருந்தது. மானாமதுரை நவதாவு அழகாபுரி நகர் முருகன் கோயிலில் தமிழ் முறைப்படி தாலி கட்டி, மாலை மாற்றி, மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அமலன் தோட்டத்தில் அ.விளாக்குளம், முத்துராமலிங்கபுரம், மேல பிடாவூர், பிள்ளத்தி கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு திருமண விருந்து வைக்கப்பட்டது. தமிழ் முறைப்படி அறுபதாம் கல்யாணம் செய்து கொண்ட ஜோடிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அவர்களிடம் கிராம மக்கள் ஆசி பெற்று சென்றனர்.