பிரியாணி கடை அலட்சியத்தால் ஷாக் | Glass pieces found in Chicken | Virudunagar Hotel news
வாயை கிழித்த சிக்கன் பீஸ் வாடிக்கையாளர் அதிர்ச்சி! விருதுநகரை சேர்ந்தவர் முகபது பாரித். ஸ்ரீவில்லிப்புத்துார் - மதுரை சாலையில் உள்ள பிரபல பிரியாணி கடையில் பெப்பர் பார்பிக்யூ சிக்கன் பார்சல் வாங்கிச் சென்றார். வீட்டிற்கு சென்று சாப்பிட்ட போது, திடீரென வாயில் ஏதோ கிழித்தது போல் இருந்தது. அடுத்த நொடி அவரது வாயில் இருந்து ரத்தம் சொட்டியது. சாப்பிட்டுக்கொண்டிருந்த சிக்கன் பீசை மேற்கொண்டு மெல்லாமல் வெளியில் எடுத்தார். சிக்கன் துண்டுகளுக்குள் சிறு சிறு கண்ணாடி துண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவை தான் அவரது வாயை கிழித்ததை உணர்ந்தார். மீதமிருந்த சிக்கன் துண்டுகளை பார்த்தபோது அவற்றிலும் கண்ணாடி துண்டுகள் இருந்தன. உடனே கடைக்குச் சென்று ஊழியர்களிடம் விளக்கம் கேட்டார். சிக்கன் தயார் செய்தபோது, சமையல் அறையில் இருந்த கண்ணாடி பாட்டில் விழுந்து நொறுங்கியதாகவும், அவற்றை அப்போதே அப்புறப்படுத்தியதாகவும் ஊழியர்கள் கூறினர். ஆனால், சிக்கனில் விழுந்த கண்ணாடி துண்டுகளை அகற்றாமல், அவற்றை அப்படியே எண்ணெயில் போட்டு பொறித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிந்தது. வாடிக்கையாளர்களின் உயிர் மீது அக்கறையின்றி செயல்பட்ட உணவகம் மீது, உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பாரித் புகார் அளித்தார்.