டிஎஸ்பியை எட்டி உதைக்க முயன்ற அரசு வழக்கறிஞர்: நடந்தது என்ன?பரபரப்பு Government lawyer aruldass cre
மயிலாடுதுறையில் முதல்வர் ஸ்டாலின் நேற்றிரவு ரோடு ஷோ நடத்தினார். கச்சேரி சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று ஸ்டாலினை வரவேற்றனர். 3 கிமீ தூரத்துக்கு அவர் கச்சேரி சாலையில் நடந்தார். அப்போது மழை பெய்ததால், காரில் ஏறி, மயிலாடுதுறை திமுக அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகம் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார். சிலையை ஸ்டாலின் திறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன், கட்சி அலுவலகம் முன் யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. அரசு வழக்கறிஞர் அருள்தாஸ் என்பவர் கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்தார். திடீரென தடுப்பை தாண்டி சாலைக்குள் குதித்தார். இதை பார்த்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து அப்புறப்படுத்துவதற்காக இழுத்துச் சென்றனர். அதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் அவர் அரசு வழக்கறிஞர்ங்க என கூறினர். அதன்பிறகு போலீசார் அருள்தாசை விட்டு விட்டனர். விட்டதுதான் தாமதம், தன்னை அவமானப்படுத்தி விட்டதாக, போலீஸ் அதிகாரிகளுடன் அருள்தாஸ் ஆவேசமாக வாக்குவாதம் செய்தார். பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த தஞ்சாவூர் டிஎஸ்பியை எட்டி உதைக்க முயன்றார். நல்லவேளை, டிஎஸ்பி நகன்று விட்டதால் உதை விழவில்லை. அதற்குள், திமுக நிர்வாகிகள் அருள்தாசை இழுத்துச் சென்று, சமாதானப்படுத்தினர். இதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. திமுக வழக்கறிஞரின் இந்த செயலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அதைத்தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் அரசு வழக்கறிஞரை எப்படி தாக்கலாம் என கேட்டு, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தான் ஒரு அரசு வழக்கறிஞர் என்பதால், ஸ்டாலினை நெருங்கி வந்து பார்ப்பதற்காக அருள்தாஸ் தடுப்பை தாண்டி வந்துள்ளார். அவர் ஸ்டாலின் வரும் சாலைக்குள் திடீரென குதித்ததால் அதிர்ந்த போலீசார், குண்டுகட்டாக அவரை அகற்ற முயன்றபோதுதான் இந்த பிரச்னை உண்டானது. முறைப்படி அனுமதி கேட்டிருந்தால் நாங்களே முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்போம் என போலீசார் கூறினர்.