குழந்தைகளின் வளர்ச்சி பாதிப்பால் பரிதவிக்கும் பெற்றோர் | Hormone deficiency | Growth hormone medicin
மனிதருக்கு உடல் வளர்ச்சியை கொடுக்கும் சோமாட்ரோபின் ஹார்மோனை பிட்யூட்டரி சுரப்பி போதுமான அளவு சுரக்காததால், உயரம் பாதிக்கப்படும்; பருவமடைதல் தாமதமாகும். இதைத்தான் ஹார்மோன் குறைபாடு நோய் என்கிறோம். இதை சரி செய்ய க்ரோத் ஹார்மோன் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், இந்நோயால் பாதித்த 22 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் க்ரோத் ஹார்மோன் மருந்து வழங்கப்படுகிறது. இப்போது 2 மாதங்களாக மருந்து தட்டுப்பாடு என கூறி மருத்துவமனையில் அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இதே மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஒரு மாதத்திற்கு பல்வேறு தவணைகளில் செலுத்த 40 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தங்களுக்கு இந்த மருந்தை வாங்குவதற்கான வசதி இல்லாததால், குழந்தைகளின் வளர்ச்சியை நினைத்து 2 மாதங்களாக தவிக்கிறோம். உடனடியாக இந்த மருந்தை திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருப்பு வைத்து தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் கூறினர்.