27 மூட்டை தலைமுடி: இரவோடு இரவாக நடந்த சம்பவம் | Hair Sale | Hair Business
பெங்களூர் லட்சுமிபுரா கிராஸ் பகுதியில் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமாக ஒரு பெரிய குடோன் உள்ளது. சலூன்கள், கோயில்களில் இருந்து தலைமுடியை மொத்தமாக வாங்கி மூட்டை மூட்டையாக சேமித்து வைத்திருந்தார். டன் கணக்கில் சேர்ந்த பிறகு சீனா, பர்மா நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு விக் செய்வதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவு குடோனுக்கு வந்த 6 கொள்ளையர்கள் இரும்புக் கம்பியைப் பயன்படுத்திக் கதவுகளை உடைத்து 27 மூட்டைகளில் இருந்த முடியை எடுத்து சென்றனர். கொள்ளை சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் பார்த்தபோதிலும் வேலை செய்யும் பணியாளர்கள் என நினைத்துள்ளனர். முடி இருந்த பைகளை மாற்றும்போது அவர்கள் தெலுங்கில் பேசியதால் சந்தேகம் வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த வழியாக சென்ற ஒருவர் மூட்டைகளில் இருந்து தாறுமாறாக முடி கீழே விழுவதைப் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஹொய்சாலா ரோந்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தபோது குடோன் கதவு பாதியளவு திறந்திருப்பதைக் கண்டுள்ளனர். அதிகாரிகள் அருகிலிருந்த மற்ற கடை உரிமையாளர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். வெங்கடரமணாவிற்கு நள்ளிரவு 2 மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.