பணத்துக்காக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் கைது! India | Pakistan | Clash | Spy | Rajasthan
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் Jaisalmer என்கிற சிறிய சுற்றுலா நகரத்தில் இருந்து 120 கிமீட்டர் தொலைவில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி உள்ளது. அப்பகுதி குறித்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிடம் தெரிவித்து வந்தவரை, ராஜஸ்தான் மாநில உளவு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பதான் கான் என்னும் பெயர் கொண்ட அந்த நபர் ஜெய்சால்மர் நகரில் வசித்து வந்தார். கடந்த மாதமே அவரை உளவு துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், அவரைக் கைது செய்திருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். தற்போது ஜெய்ப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ள பதான் கானிடம் மற்ற பாதுகாப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்த உள்ளனர். பதான் கான் பணத்துக்காக பாகிஸ்தான் சென்று ஜெய்சால்மர் சர்வதேச எல்லை குறித்த ரகசியங்களை தெரிவித்து வந்துள்ளான். 2013ல் இதற்காக பாகிஸ்தான் சென்று ஐஎஸ்ஐ அமைப்பிடம் பயிற்சி பெற்றுத் திரும்பி உள்ளான். அதன் பிறகு பலமுறை பாகிஸ்தானுக்கு சென்று வந்ததாகவும் ராஜஸ்தான் உளவுத் துறை, அவனுடைய கைது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பைசரன் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.