இந்தியாவின் கேம் சேஞ்சர் ஆன ஆகாஷ் அஸ்திரம் | india vs pakistan | akash missile system on pak attack
பாகிஸ்தானில் புகுந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் நேற்று இரவு அடாவடித்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறி வைத்து போர் விமானம், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்கியது. துல்லியமான முறையில் தாக்குதலை முறியடித்த நம் ராணுவம், பாகிஸ்தான் அனுப்பிய F-16 ரக போர் விமானம் ஒன்றையும், இரண்டு JF-17 ரக போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது. 8 ஏவுகணைகளையும் 50 ட்ரோன்களையும் வானிலேயே இடைமறித்து தவிடு பொடியாக்கியது. பாகிஸ்தான் தாக்குதலை முறியடிக்க இந்தியா பயன்படுத்திய பல விதமான வான் பாதுகாப்பு கவசங்களில் முக்கியமான ஒன்று ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு சிஸ்டம். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சிஸ்டம். இதில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், தரையில் இருந்து பறந்து சென்று வானில் வரும் எதிரிகளின் ஆயுதங்களை இடைமறித்து துல்லியமாக அழித்து விடும். எதிரிகளின் ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்களை துல்லியமாக தாக்கும் சக்தி கொண்டது. இதில் சக்தி வாய்ந்த ராஜேந்திரா என்னும் ராடார் வசதி உள்ளது. எதிரியின் இலக்கு 180 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் போதே துல்லியமாக கண்டுபிடித்து தகவல் அனுப்பி விடும். மறுகணமே ஏவுகணையை ஏவி அதை தவிடுப்பொடியாக்கும் வேலையை துவங்கும். 30 முதல் 35 கிலோ மீட்டர் தூரத்தில் எதிரியின் இலக்கு வரும் போது, அதை சுக்குநூறாக நொறுக்கி விடும். ஆகாஷ் தடுப்பு சிஸ்டம் ராணுவம் மற்றும் விமானப்படை வசம் உள்ளது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. விமானப்படையிடம் இருக்கும் ஆகாஷ் ஏவுகணை சிஸ்டத்தின் ராடார் 60 கிலோ மீட்டர் ரேடியசை கண்காணிக்கும். ஒரே நேரத்தில் 64 இலக்குகளை குறி வைக்க முடியும். அதே நேரம் ராணுவத்திடம் இருக்கும் ஆகாஷ் சிஸ்டத்தின் ராடார், 100 கிலோ மீட்டர் ரேடியசில் 40 இலக்குகளை குறி வைக்கும் சக்தி கொண்டது. ஆகாஷ் சிஸ்டத்தில் இருந்து பறக்கும் ஏவுகணை மணிக்கு 4321 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று தாக்க கூடியது. இதன் தாக்கும் திறன் 98.5 சதவீதம். அதாவது, நூற்றில் 98 இலக்குகளை துல்லியமாக காலி செய்து விடும். இந்த சக்தி வாய்ந்த சிஸ்டமும் பாகிஸ்தானை துவம்சம் செய்த முக்கிய ஹீரோக்களில் ஒன்று. இதை நாமே தயாரித்து இருப்பது கூடுதல் பெருமை என்று ராணுவ வட்டாரம் கூறியது.