உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போர் நின்ற பின் சேதங்களை உறுதி செய்தது ஈரான்

போர் நின்ற பின் சேதங்களை உறுதி செய்தது ஈரான்

ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த 21ம் தேதி இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் இறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற பெயரில் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய 3 முக்கிய அணு சக்தி மையங்கள் மீதும் அமெரிக்க போர் விமானங்கள் குண்டுகள் போட்டன. அமெரிக்க படைகள் கன கச்சிதமாக தாக்குதல் நடத்தி வேலையை முடித்து விட்டதாகவும், ஈரான் அணுசக்தி மையங்கள் அழிந்து விட்டதாகவும் டிரம்ப் பெருமையுடன் கூறினார். ஆனால், இந்த தாக்குதலில் ஈரானின் அணு உலைகள் அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க பத்திரிகைகள் சுட்டிக்காட்டின. லேசான பாதிப்பு தான் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு சில மாதங்களில் ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்தை தொடங்கும் செய்தி வெளியிட்டன. கடுப்பான அதிபர் டிரம்ப், பத்திரிகைகள் பொய் சொல்வதாக கொதித்தார். அமெரிக்க வரலாற்றில் வெற்றியடைந்த தாக்குதல்களில் இதுவும் ஒன்று. இதை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஈரானின் அணுசக்தி மையங்கள் அழிந்துவிட்டன. அதை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகும் என கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் விதமாக, அமெரிக்க தாக்குதலில் அணுஉலைகள் சேதம் அடைந்து இருப்பதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சக அதிகாரி இஸ்மாயில் பாஹாய் கூறும்போது, அமெரிக்காவின் தாக்குதலில் எங்களின் முக்கிய அணுசக்தி மையங்கள் மிக மோசமாக சேதம் அடைந்துள்ளன என்றார். எனினும், எத்தகைய சேதங்கள் என்ற விவரங்கள் அவர் சொல்லவில்லை. அமெரிக்காவின் B2 போர் விமானங்கள் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதே இவ்வளவு சேதத்திற்கும் காரணம் என இஸ்மாயில் ஒப்புக்கொண்டார். ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே கூறும்போது, தாக்குதலில் எங்கள் அணுசக்தி மையங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஐ.நா-வில் புகார் அளிப்போம் எனக்கூறினார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி