2010ல் நடந்தது ஞாபகம் இருக்கா? | Stuxnet | Israel
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ல் போர் துவங்கியது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்படுகிறது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஆயுத குழுக்களில் ஹிஸ்புல்லா மிக சக்தி வாய்ந்த அமைப்பாக உள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் மூண்டதில் இருந்து ஹிஸ்புல்லா இன்னும் தீவிரமாக களத்தில் இறங்கியது. இஸ்ரேல் மீது எல்லை தாண்டி சென்று துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதனால் ஹிஸ்புல்லா ஆட்டத்துக்கு முடிவு கட்ட இஸ்ரேல் முடிவு செய்தது. உளவு அமைப்பான மொசாட் மூலம் ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. வழக்கமான தாக்குதலாக இல்லாமல் உலகமே எதிர்பாராத மரண அடியாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. தொழில்நுட்ப ரீதியாக திறமைமிக்க வல்லுனர்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு என்னென்ன பொருட்கள், எங்கிருந்து சப்ளை ஆகிறது என்பதை விரல் நுனியில் எடுத்தது மொசாட். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் பயன்படுத்தும் தகவல் தொழில்நுட்ப கருவியான பேஜர், வாக்கி டாக்கி சிப்களில் வெடி மருந்து வைக்கப்பட்டது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கும் வகையில் செட் செய்யப்பட்டது.