காஸாவில் உணவுக்காக காத்திருந்த 70 பேருக்கு சோகம் Israel kills |gaza |world food programme |UN|
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினர் 2023ல் இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், பலரை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். அதன் பிறகு இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காஸாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 58 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். சண்டையை நிறுத்த இஸ்ரேலுடனும், ஹமாஸ் அமைப்பினர் உடனும் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்துகிறது. இருந்தாலும் காஸாவுக்குள் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் தொடருகிறது. இதனால் காஸாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபை மூலம் முகாம்கள் அமைத்து காஸா மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியின் விளிம்பில் இருப்பதாகவும், மூன்றில் ஒருவருக்கு பல நாளாக உணவு கிடைக்கவில்லை என்றும் ஐநாவின் உலக உணவு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஐநா உணவு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குல் நடத்தியது. இதில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மே 27ம் தேதியில் இருந்து காஸாவில் உணவுக்காக காத்திருந்த சுமார் 800 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ஐநாவும் தெரிவித்துள்ளது.