இந்தியா பதிலடிக்கு பக்கபலமாக இஸ்ரேல் | operation sindoor | pahalgam attack | israel on ind vs pak
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி தாக்கியது. ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த இந்த ஆப்ரேஷனில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் பதிலடிக்கு இஸ்ரேல் ஏகோபத்திய ஆதரவு தெரிவித்துள்ளது. இது பற்றி மேற்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கோப்பி ஷோஷானி கூறியது: இந்தியாவுக்கு தன்னை தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்காப்புக்காக இந்தியா நடத்திய தாக்குதல் எங்களை பெருமைப்பட வைத்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் உலகின் எல்லா நாடுகளுக்கும் வலுவான செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது. பதிலடி மூலம் பயங்கரவாதிகளுக்கும் இந்தியா செய்தி சொல்லி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு மோடி சூட்டிய பெயர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. ஆப்ரேஷன் சிந்தூர் என்று மிகச்சரியான, பொருத்தமான பெயரை அவர் வைத்துள்ளார். அந்த பெயர் என் இதயத்தை தொட்டு விட்டது என்று ஷோஷானி கூறினார். திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஹவுதி பயங்கரவாதிகளுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்ததை சுட்டிக்காட்டியும் ஷோஷானி பேசினார். ‛உலகின் எந்த நாடுகளும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ளக்கூடாது. பயங்கரவாதிகள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். எந்த தாக்குதலுக்கும் பதிலடி நிச்சயம் உண்டு. நாங்கள் ஒரு போதும் எங்கள் நிலத்தில் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றார்.