ஏமனில் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் வேட்டை-பரபர காட்சி israel vs houthi | hodeida | idf attack
காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து ஹமாஸ் பிடித்து சென்ற பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்காததால், 2 மாத போர் நிறுத்தத்துக்கு பிறகு மீண்டும் போரை துவங்கியது இஸ்ரேல். இந்த முறை காசாவை டோட்டலாக கைப்பற்றும் முனைப்புடன் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹெஸ்புலாவும், ஏமனில் இருந்து ஹவுதிகளும் களம் இறங்கின. லெபனானில் போரை துவங்கிய இஸ்ரேல், ஹெஸ்புலா பயங்கரவாதிகளை ஓட ஓட அடித்தனர். தாக்குதலை சமாளிக்க முடியாமல் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட்டு விட்டு ஹெஸ்புலா ஒதுங்கிக்கொண்டது. ஆனால் ஹவுதி பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்கவில்லை. ஏமனில் இருந்தபடி அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடிய தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலை நோக்கி சக்தி வாய்ந்த ஏவுகணையை ஹவுதி படை அனுப்பியது. இஸ்ரேலின் முக்கிய ஏர்போர்ட்டான டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையம் பகுதியில் விழுந்து வெடித்தது. ஏர்போர்ட்டில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். ஏர்போர்ட்டின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. விமான சேவையும் உடனே நிறுத்தப்பட்டது. சில மணி நேரம் கழித்து இயல்புநிலை திரும்பியது. இஸ்ரேலிடம் உள்ள சக்தி வாய்ந்த ஏவுகணை தடுப்பு சிஸ்டங்களை தாண்டி ஹவுதியின் ஏவுகணை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹவுதி நடத்திய தாக்குதலால் இஸ்ரேலுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை சரிகட்ட 7 மடங்கு வீரியமிக்க பதிலடியை தருவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். அதன்படி ஹவுதி தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்துக்கு வேட்டையை ஆரம்பித்தது இஸ்ரேல். இஸ்ரேலில் இருந்து 2000 முதல் 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஏமன் நோக்கி 20 போர் விமானங்கள் பறந்தன. ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் Hodeida துறை முகம் மற்றும் Bajil நகரில் இவை சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இதில் துறைமுகம் சின்னாப்பின்னமானது. பாஜில் நகரும் கடும் சேதம் அடைந்தது. ஹவுதி மீது தாக்குதலை நிறைவு செய்து 20 போர் விமானங்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பின. இந்த நிலையில் பாதிப்பு குறித்து ஹவுதி பயங்கரவாதிகள் அறிக்கை வெளியிட்டனர். Hodeida துறை முகத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயம் அடைந்தனர். பாஜிலில் உள்ள சிமென்ட் தொழிற்சாலையில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 35 பேர் காயம் அடைந்தனர் என்று ஹவுதி கூறியது. Hodeida துறைமுகம் வழியாக தான் ஈரானில் இருந்து ஹவுதிகளுக்கு ஆயுதங்கள் வந்திறங்குகின்றன. அதே போல் பாஜிலில் உள்ள கட்டுமான தொழிற்சாலை மூலம் தான் தங்களது எல்லா கட்டமைப்புகளையும் ஹவுதிகள் ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக சுரங்கங்கள், பதுங்குகுழிகள் அமைக்க தொழிற்சாலையில் இருந்து தான் சகல பொருட்களும் செல்கின்றன. எனவே தான் இந்த 2 இடங்களையும் குறிவைத்து அழித்தோம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியது.